வெள்ளி, 7 டிசம்பர், 2012

உன்னையே நீ அறிவாய்




மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழச்சித்தர் திருமூலரின் புகழ்பெற்ற கூற்று "தன்னை அறிந்திடில் தனக்கொரு கேடில்லை". அவ்வாறே உன்னையே நீ அறிவாய் என்பது சாக்ரடீஸின் புகழ்பெற்ற வாசகம். எதையும் அப்படியே நம்பிவிடாதே ஏன்? எதற்கு? என்று கேள்வி கேள் என்ற சிந்தனைதான் சாக்ரடீஸ் இந்த உலகிற்கு விட்டுச்சென்ற மாபெரும் சொத்து. ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை கவிஞர் வாலியின் இந்த பாடல் வரிகளை 2500 ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்ந்து காட்டியவர் சாக்ரடீஸ். ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் அந்த பாடல்வரி இடம்பெற்றிருந்தது. சளைக்காமல் ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேட்டதால் சாக்ரடீஸை ஆயிரத்தில் அல்ல ஆயிரம் கோடியில் ஒருவராக இன்று மதிக்கிறது உலகம்.

மனித வாழ்க்கையை செம்மைப் படுத்துவதிலும், மனித நாகரிகத்தை வழிமொழிவதிலும் தத்துவஞானிகளின் பங்கு அளப்பறியது. வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் பல தத்துவஞானிகள் உதித்திருக்கின்றனர். உலகின் சிந்தனையை பல்வேறு வழிகளில் செம்மைப் படுத்தியிருக்கின்றனர். அவர்களுள் தலையாயவர் தத்துவஞானிகளின் தந்தை என்று போற்றப்படுபவரும், கிரேக்கத்தின் புகழை உலகெல்லாம் பரவச்செய்தவருமான சாக்ரடீஸ். ஒரு சாதாரண குடும்பத்தில் கி.மு.469 ஆம் ஆண்டு பிறந்தார் சாக்ரடீஸ். ஏழ்மையில்தான் பிறந்தார் வறுமையில்தான் வாழ்ந்தார். இளவயதில் ராணுவ வீரராக இருந்து ஏதென்ஸுக்காக பல போர்களில் பங்கெடுத்தார்.


சாக்ரடீஸ் வாழ்க்கையைப்பற்றி அதிகமாக சிந்தித்தார், எதையுமே வித்தியாசமாகவும் சிந்தித்தார் அவரது சிந்தனைகள் அந்த காலகட்டத்தில் உண்மை என நம்பப்பட்டவைகளின் அஸ்திவாரங்களையே ஆட்டம் காணச்செய்தன. வாழ்வின் உண்மைகளை கண்டறிய வேண்டும் என்ற அதீத தாகம் சாக்ரடீஸுக்கு இருந்தது. தான் அறிந்த உண்மைகளை மக்களுக்கு சொல்ல அவர் கையாண்ட உத்தியே அலாதியானது அற்புதமானது. அவர் கிரேக்கத்தின் பகல்பொழுதில் கையில் விளக்கேத்திக்கொண்டு கூட்டமுள்ள இடத்தில் எதையோ குனிந்து தேடுவதுபோல் நடிப்பார். வேடிக்கை பார்க்க அங்கு கூட்டம் கூடும். என்ன தேடுகிறீர்கள் என்று எவராவது கேட்கும்போது மனிதர்களைத் தேடுகிறேன் என்று பதில் கூறுவார். மக்கள் புரியாது விழிக்கும்போது அவர்களிடம் விளக்கிப்பேசி தன் கருத்துக்களை அவர்களது மனங்களில் விதைப்பார்.


சாக்ரடீஸ் வாழ்ந்த காலகட்டம் மதங்கள் தோன்றாத காலம். அபோது ஏதென்ஸ் மக்கள் நிலவையும், சூரியனையும், இதிகாச நாயகர்களையும் கடவுளாக வழிபட்டு வந்தனர். அதனை எதிர்த்து துணிந்து கேள்வி கேட்டார் சாக்ரடீஸ். துணிந்து கேள்வி கேட்டவர்களை எள்ளி நகையாடுவதும், அவர்கள் பணிந்து போக வேண்டும் என்று துன்புறுத்தி வற்புறுத்துவதும்தான் வரலாறு முழுவதும் காணப்படும் உண்மை. கேள்வி கேட்க கேட்க சாக்ரடீஸின் எதிரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போனது. சாக்ரடீஸின் அறிவுப்பூர்வ பேச்சால் புரட்சி வெடிக்கலாம் என அஞ்சினர் ஆட்சியாளர்கள். சமுதாயத்தை சீர்திருத்த நினைத்தவர் மீது கிரேக்க இளையர்களிடம் தவறான கருத்துக்களை பரப்புகிறார் என்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. குற்றச்சாட்டுகளை ஆணித்தரமாகவும் அறிவுப்பூர்வமாகவும் மறுத்தாலும் தனது 70 ஆவது வயதில் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டார் சாக்ரடீஸ்.


என்னை நீதிமன்றத்தின்முன் நிறுத்திய என் எதிரிகளை நான் குறுக்குவிசாரணை செய்யவிரும்பவில்லை. என்னுடைய உண்மையான எதிரிகள் அநீதியும், அறிவின்மையும்தான். நான் கல்லையும், மண்ணையும் கடவுள் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறேன். நான் கல்லுக்கும் மண்ணுக்குமல்ல ஒரு பெண்ணுக்குதான் பிறந்தேன். கடவுளைப்பற்றி ஆராய்ட்சி செய்வது நாத்திகம் என்றால் கடவுளை ஒப்புக்கொள்ள எங்கே மறுத்துவிடுவார்களோ என்று பயப்படுவது அதைவிட நாத்திகம். நீங்கள் என்னை மன்னித்து வெளியே அனுப்பினாலும் என் உயிருள்ளவரை தர்க்கவாதத்தைத் தொடர்வேன். உண்மையில் எனக்கு அறிவில்லை மற்றவர்களுக்கும் இல்லை. மற்றவர்கள் அதை உணரவில்லை நான் எனது அறிவீனத்தை உணர்ந்தேன் அவ்வளவுதான் வேற்றுமை. நான் மரணத்திற்கு அஞ்சவில்லை. அநீதிக்குதான் அஞ்சுகிறேன் எனக்கும் உங்களுக்கும் பொதுவான கடவுள் பெயரால் நீதி கேட்கிறேன். இவ்வாறு நீதிமன்றத்தில் பேசினார் சாக்ரடீஸ்.


சாக்ரடீஸுக்கு மரணமா, மன்னிப்பா என்று முடிவு செய்ய 501 நபர்கள் கொண்ட நீதிக்குழு வாக்களித்தனர் அதில் 220 பேர் மன்னிப்புக்கும் மீதி 281 பேர்கள் மரணத்திற்கும் வாக்களித்தனர். மரண தண்டனை உறுதியானது. ஆனால் அப்போதுகூட கலங்கவில்லை சாக்ரடீஸ் ஏனெனில் மரணத்தைப்பற்றி அவரே ஒருமுறை இவ்வாறு கூறியிருந்தார் மரணத்தைப் பற்றி கவலைப்படாதே நீ இருக்கும்வரை மரணம் வரப்போவதில்லை அது என்னவென்று உனக்கு தெரியாது அது வந்தபோது நீயே இருக்கப்போவதில்லை பிறகு ஏன் கவலை” . சாக்ரடீஸுக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முடிவு செய்யப்பட்டது. அப்போது ஏதென்ஸில் விழாக்காலமாக இருந்ததால் அவரது மரணம் மூன்று வாரங்களுக்கு தள்ளிப்போடப்பட்டது. கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டு சாக்ரடீஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.


சாக்ரடீஸை எப்படியாவது விடுவித்துவிட வேண்டுமென்று என்று துணிந்த சாக்ரடீஸ் நண்பரும், மாணவருமான கிரீட்டோ சிறைக்குள் புகுந்தார் தப்பி ஓடிவிடலாம் என சாக்ரடீஸை கெஞ்சினார். அதற்கு சாக்ரடீஸ் என்னருமை கிரீட்டோ நான் நீதியை நேசித்தவன் நேர்மையானவன் என்ற நற்பெயரோடு இறந்துவிடுகிறேன் எவரும் கவலைப்பட வேண்டாம் என் உடலை எரிப்பதா, புதைப்பதா என்ற குழப்பமும் வேண்டாம் இறந்தபிறகு உடலில் நான் ஏது அது வெறும் உணர்வற்ற சடலம்தான் அதை எப்படி செய்தால் என்ன கி.மு.399 ஆம் ஆண்டு சாக்ரடீஸின் மரணம் குறிக்கப்பட்ட நாள் வந்தபோது ஒரு விஷக்கோப்பையை சாக்ரடீஸுக்கு கொடுத்த சிறை அதிகாரி அறிவுத் தெளிவுடன் இருக்கும் தங்களுக்கு விஷம் கொடுக்க வேண்டும் என்ற நினைப்பே என்னை வருத்துகிறது என்று கூறிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு அழுதார். புன்னகையுடன் விஷக்கோப்பையைப் பெற்று மறுமொழி சொல்லாமல் விஷத்தை அருந்தி உயிர் துறந்தார் சாக்ரடீஸ்.


வாழ்நாள் முழுவதும் கேள்வி கேட்ட சாக்ரடீஸ் தனது மரணத்தைப்பற்றி ஒரு கேள்விகூட கேட்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. சாக்ரடீஸின் இறுதி ஊர்வலத்தில் பேசிய அவரது மாணவரும் கிரேக்கம் தந்த இன்னொரு தத்துவ மேதையுமான பிளேட்டோ இவ்வாறு கூறினார் ஏதென்ஸ் நகர நண்பர்களே ஒரு நல்லவரை மாபெரும் அறிஞரை வீண்பழி சுமத்தி கொன்றுவிட்ட குறை மதிப்படைந்த நாடு என்ற தீராத பழிச்சொல்லை ஏதென்ஸ் சுமக்கப் போகிறது. சாக்ரடீஸின் உயிர் பிரிந்த சில நாட்களிலிலேயே தனது தவறை உணர்ந்தது ஏதென்ஸ். சாக்ரடீஸின்மீது பழி சுமத்தியவர்களில் சிலர் பிறகு குற்ற உணர்வால் தூக்கிலிட்டு கொன்றதாக வரலாறு கூறுகிறது.


நம் முன்னோர்கள் பின்பற்றினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நாமும் எல்லாவற்றையும் அப்படியே பின்பற்ற வேண்டுமா? என்ற கேள்வியை நாம் கேட்டுக்கொள்ளலாம். நமது வாழ்க்கையை முடக்கும் சில மூட நம்பிக்கையை களையெடுக்கலாம். ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேட்டால் சாக்ரடீஸைப் போல, தமிழ்ச்சித்தர்களைப் போல நமக்கும் தெளிவு பிறக்கும்


பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!


                         



மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு
பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்
த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!

இவர் தான் தலைவர்



                            



தமிழர்களை நான் தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன் தான்.

நண்பர்களே முழுமையாக படியுங்கள்.

தமிழன் யார் என்பதை அகிலமே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஒரு நாட்டின் வரலாற்றை மாத்தரமல்ல உலகின் பெரும் பகுதி வரலாற்றையே தலைகீழா
க புரட்டிப் போட்ட ஈழப் போராட்டத்தின் நாயகன் பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உலகத் தமிழினத்தின் எண்ணம், சொல், செயல், மாற்றமடையக் காரணமானவர் பிரபாகரன்

தமிழர்களுக்கு தமிழுணர்வை ஊட்டியவர். சோம்பிக் கிடந்த இனத்தைத் தட்டியெழுப்பினவர் என்பதோடு நிறுத்த முடியாது. பூமிப் பரப்பெல்லாம் தமிழின் விதை விதைக்கக் காரணமானவர் அவர்தான.; சென்ற இடத்தில் மறைந்து வாழ்ந்த தமிழர்களை நான் தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன் தான் .

இனித் தமிழர் வரலாறு தூக்க நிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை அவர் அடியெடுத்த போராட்ட மரபு தொடரும். கூலிகள் என்றும் வந்தேறு குடிகள் என்றும் நாதியற்றவர்கள் என்றும் தூற்றப்பட்ட உலகத் தமிழர்களை வலிமை பெற்று உரிமை கோர வைத்தவர் தலைவர் பிரபாகரன்.

இணையத்தில் தமிழ் உலகின் முக்கிய மொழிகளில் ஒன்றாகத் திகழக் காரணமானவர் தமிழியலுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் ஊக்கு கருவியாகத் திகழ்பவர் தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, தமிழன் தோற்றம், வளர்ச்சி பற்றிய ஆய்வுக்குத் தோன்றாத் துணையாக நிற்பவர். பலரை வரலாறு படைக்கின்றது ஒரு சிலர் வரலாற்றைப் படைக்கிறார்கள் அந்தச் சிலரில் ஒருவர் பிரபாகரன். மிக விரைவில் பிரபாகரன் யுகம் தோன்றும் அப்போது உலகம் நினைத்துப் பார்க்காத உயரத்திற்க்குத் தமிழினத்தைப் பிரபாகரன் தூக்கிச் சென்று நிறுத்தியதைத் தமிழினம் உணரும்.

அன்று தொட்டு இன்று வரை தமிழரின் போரட்டம் அற வழியைத் தழுவி நிற்கின்றது அகிம்சை வழியிலும் சரி, ஆயுத வழியிலும் சரி தமிழர் வரித்துக் கொண்ட போராட்டம் தர்மத்தின் நியமத்தில் நெறிப்பட்டு நிற்கின்றது அவர் நடத்திய ஈழவிடுதலைப் போர் தார்மீக அடிப்படையிலானது. அது தமிழர்களின் ஆன்மபலமாகவம் இருந்து வருகிறது. சிங்களவர்கள் உண்மையான புத்த மதத்தினராக இருந்தால் தமிழீழ விடுதலைப் போருக்கான அவசியம் இராது சமாதானப் பேச்சென்றாலும் சரி, போர் என்றாலும் சரி, சிங்களவர்கள் நேர்மை, நிதானம், காருண்யம் அற்றவர்களாக வெளிப்படுகிறார்கள் சிங்களப் பயங்கரவாதம் ஈழத் தமிழர்களின் தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே மாறப்போவதில்லை.

விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியல் பாதைஎன்று பிரபாகரன் மிகச் சுருக்கமாகக் கூறியிருக்கிறார். அவர் தொடர்ந்து பேசுகிறார் விடுதலை என்ற இலட்சியத்தை நாம் இலகுவாகத் தேர்ந்தெடுக்கவில்லை. வரலாறுதான் அதை எம்மிடம் வலுக்கட்டாயமாகக் கையளித்துள்ளது சுதந்திரம் வேண்டுவதைத் தவிர வேறு வழி எதையும் வரலாறு எமக்கு விட்டு வைக்கவில்லை .

தமிழர்களை ஏமாற்றுவதும் அடிமை கொள்ளும் நோக்குடன் இன அழிப்புச் செய்வதும் சிங்கள தேசத்தின் பாரம்பரிய நடைமுறை. தற்காக புத்த மதத்தைத் துணைக்கு அழைக்க அவர்கள் தயங்கியதில்லை சிங்கள மக்களின் பாலி மொழி இதிகாசமான மகாவம்சத்தின் நாயகனான துட்ட காமினி போர் மரபை மீறீத் தமிழ் மன்னன் எல்லாளனை வஞ்சகமாகக் கொன்றான் பல்லாயிரம் தமிழர்களையும் அதே போரில் அவன் கொன்றான்.

இரத்த வெறி அடங்கியபிறகு அவன் சோர்வடைந்து மாளிகை உப்பரிகையில் படுத்திருந்தான் உயிர்ப்பலி அவனை துயரடையச் செய்ததாக மாகவம்சம் கூறுகிறது அவனுக்கு ஆறதல் மொழி கூறுவதற்காக எட்டு புத்த பிக்குகள் வான் மூலம் பறந்து அவனிடம் வந்து சேர்ந்தனர். புத்த மதத்தைச் செராதவர்களைக் கொல்வதில் பாவமில்லை என்ற ஞான உபதேசத்தை பிக்குகள் மன்னனுக்கு வழங்கி அவனுக்குப் புத்துணர்ச்சி ஊட்டியதாக மகாவம்சம் கூறுகிறது அண்மையில் புத்த பிக்கு ஒருவர் வெளியிட்ட ஆங்கில ஆய்வு நூலில் சிங்கள தேசியத்தின் அதியுச்சம் துட்டகாமினியின் தமிழ்ப் படுகொலைகளின் போது எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிங்கள பௌத்தம் என்ற புதிய மதத்தைச் சிங்களப் பேரினவாதிகள் உருவாக்கியுள்ளனர் திவ்வியஞான சபையைச் சேர்ந்த (Theosophical society ) காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி கொழும்பு வந்த போது இதைக் கடுமையாகச் சாடியுள்ளார் .

சிறிலங்கா தனது அரசியல் சாசனத்தின் மூலம் புத்த மதத்திற்கு மேலிடம் வழங்கியுள்ளது புத்த மதத்தைத் பாதுகாத்தல் அரசின் பொறுப்பு என்று அரசியல் சாசனம் இடித்துரைக்கிறது. சிறிலங்கா மதச் சார்புள்ள நாடு. படிப்படியாகப் பிற மதங்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது
தமிழ் நாட்டிலும் தமிழீழத்திலும் தமிழர் மத்தியில் புத்த மதம் முன்னர் செழித்தோங்கி இருந்தது 7ம் நூற்றாண்டில் தொடங்கிய சிவ மதத்தின் மறுமலர்ச்சிக்குப் பிறகு இரு பகுதிகளிலும் புத்த மதம் மங்கிவிட்டது ஆனால் வரலாற்றுச் சின்னங்கள் கிடைக்கின்றன.

ஈழத் தமிழர் வாழும் பகுதிகளில் புத்த சின்னங்களும், புத்த கோயில்களின் எச்சங்களும் காணப்படுகின்றன இவை சிங்கள பௌத்தத்தின் அடையாளங்கள் என்று சிங்கள பௌத்த பேரினவாதிகள் புதிய வரலாறு படைக்கின்றனர் யாழ் கந்தரோடையிலுள்ள புத்த மத இடிபாடுகள் சிங்கள பௌத்தத்திற்கு உரியவை என்ற வாதம் நிறுவப்படுகிறது.
கந்தரோடை இடிபாடுகளுக்கு சிங்களப் பெயர் சூட்டப் பட்டுள்ளதோடு சிங்களப் புத்த பிக்குகளும் அங்கு நிலைகொண்டுள்ளனர் பிக்குகளின் பாதுகாப்பிற்காக சிங்கள இராணுவ அணி நிறுத்தப்பட்டுள்ளது பாலஸ்தீன அரபு மக்களின் பூர்வீக நிலத்தை ஆக்கிரமிக்கும் யூத அரசு போலி வரலாற்று செய்திகளைக் கூறுவது வழமை.

பழைய ஏற்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட பெயர்களை ஆக்கிரமிப்புச் செய்த நிலத்திற்குச் சூட்டியபின் அது புராதான கால யூத நிலம் என்று உரிமை கோருவது இஸ்ரேலிய நடைமுறை இதைச் சிங்கள அரசும் பின்பற்றுகிறது சிறிலங்கா சுதந்திரம் பெற்ற நாட்தொட்டுத் தமிழர் நிலத்தில் சிங்களக் குடியேற்றங்கள் இடைவிடாது நடக்கின்றன.

எந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் வெப்ப வலய மேம் பாட்டுத் திட்டம் என்ற பெயரில் சிங்களக் குடியேற்றம் தமிழர் எதிர்ப்பையும் மீறி முன்னெடுக்கப் படுககின்றது இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படை தமிழர்களை விரட்டுவதற்கும் குடியேற்ற வாசிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

தமிழர் நிலத்திற்க்குப் புதிய சிங்களப் பெயர் சூட்டும் செயற்பாடு இன்னுமோர் பக்கத்தில் நடக்கிறது பெயர் மாற்றம் செய்யப்பட்ட தமிழ் மண்ணின் பட்டியல் மிக நீளமானது மிக அண்மையில் முல்லைத்தீவு மூலதூவ என்றும் கிளிநொச்சி கிரானிக்கா என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இனப் படுகொலையின் அங்கமாகவும் சிங்களக் குடியேற்றத்தை பார்க்கலாம் மணலாறில் வாழ்ந்த தமிழ்க் குடும்பங்கள் nஐனரல் ஐhனகா பெறேரா தலைமையிலான இராணுவத்தால் சுட்டும் வெட்டியும் கொன்று விரட்டப்பட்டுள்ளன. ஓரு தமிழ்க் கிராமத்திற்கு ஐhனகாபுர என்று தன்னுடைய பெயரை அவர் சூட்டியுள்ளார் குடியேற்றத்தின் மூலம் தமிழர்கள் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, மணலாறு ஆகிய பகுதிகளில் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டுள்ளனர் இப்போது வடக்கில் குடியேற்றம் தொடங்கிவிட்டது.

குடியேற்றத்தின் மூலம் இனப் பிரச்சனைக்குத் திர்வு காணமுடியும் என்று கூறும் புவியியல் ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. வடக்கு கிழக்கில் தமிழர் வாழும் நிலம் சிங்களவருடைய நிலம் என்று வாதிடும் சிங்களப் பேரினவாதிகள் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இலங்கையில் நிலவிய சோழர் ஆட்சியின் போது தாம் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். தாம் குடியேறும் நிலத்திற்கு தாமே சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்லவென்றும் வாதிடுகிறார்கள். இது போதாதென்று 1956 தொடக்கம் காலத்திற்கு காலம் அரசு ஆதரவு பெற்ற சிங்களக் காடையர்கள் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் தமிழர் மீது தாக்குதல் நடத்தினார்கள். உயிரிழப்புக்களையும் சொத்திழப்புக்களையும் தமிழர்கள் சந்தித்தனர் 1983ல் இது உச்சம் அடைந்தது.

பாதிக்கப்பட்ட தமிழர்கள் வெளிநாடுகடுளுக்குத் தப்பியோடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது தமிழ் டயஸ் போறா எனப்படும் புலம்பெயர் தமிழர் சமூகம் அனைத்துலக மட்டத்தில் தோன்றியது உலகத் தமிழர் என்றால் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் என்ற கருத்து நிலவுவதற்கு இது தான் காரணம்

தமிழர் தாயகம் மனிதப் புதைகுழிகள் நிறைந்த பூமி மட்டு அம்பாறைத் தமிழுறவுகள் கொடுத்த விலை மிக அதிகம் கொக்கட்டிச் சோலையிலே தமிழர் வீடுகள் குடிசைகள் தோறும் எண்ணற்றோர் உயிரிழந்துள்ளனர் வடக்கில் செம்மணி, வயாவிளான் என்பன கொன்று புதைக்கப்பட்டவர்களுக்குச் சாட்சி பகர்கின்றன இறுதியாக இப்போது முள்ளிவாய்க்காலில் மீண்டும் புதைகுழி.

வரலாறு எமது வழிகாட்டி என்று சொன்ன தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் சிங்களப் பயங்கரவாதம் எமது தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே மாறப் போவதில்லை என்று அடித்தக் கூறியுள்ளார் .

பிரபாகரனின் தனிப்பெரும் பண்புகளை இங்கு எடுத்துக் காட்டலாம் குறைந்த பேச்சு, நிறைந்த கேள்வி, தனித்த சிந்தனை, கருத்தில் தெளிவு சாதனைக்கு மதிப்பு எனலாம் அவர் மேடை போட்டு முழங்கியதில்லை. வேட்டி சால்வை அணிந்து அரசியல்வாதி வேடம் தரித்ததில்லை தந்தவனுக்கே திருப்பி கொடு இது தான் அவருடைய செய்தி அடித்தவனைத் திருப்பியடி என்பது இந்தச் செய்தியின் சாரம்சம் அறிவு ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் தமிழீழனம் வளர வேண்டுமென்டு ஆசைப்பட்டு அதற்காக உழைத்தவர் விடுதலைப் பெற்ற தமிழீழம் பொருளாதார சுபீட்சம் காணவேண்டுமென்டு திட்டமிட்டார்.

சாதி ஒழிப்பிற்கு அவர் முன்னுரிமை அளித்தார் சீதனக் கொடுக்கல் வாங்கலைத் தடைசெய்தார் மதச் சமத்துவத்தைப் பேணினார் தமிழீழ காவல்துறையை உருவாக்கி சட்ட ஒழுங்கை அமுலாக்கினார் ; எல்லாவற்றிக்கும் மேலாக அவர் பெண்கள் வாழ்வில் புரட்சிகர மாற்றத்தைத் ஏற்படுத்தினார் ஒரு புதுமைப் பெண்னை, புரட்சிகரப் பெண்னை தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள் அதன் தாக்கம் நிரந்தரமானது.

தேசியத் தலைவர் அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் மகளீர் படையணினின் தோற்றமும் வளர்ச்சியும் எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று என்று சொன்னார்.

தன்னாட்சி பெற்ற தமிழீழத்திற்கான அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்காக உலகின் தலைசிறந்த அரசறிவியல் பேராசியர்களையும் புலிகள் அமைப்பில் உறுப்பியம் பெற்;ற வல்லுனர்களையும் ஒன்றிணைத்து ஒரு வரைவைத் தயாரித்தார் சாசனவியலாளர்களால் அந்த வரைவு போற்றி பாதுகாக்கப்படுகிறது.

ஒடுக்கப்பட்ட இனம் தொடர்ந்து ஒடுங்கியிராது என்பதற்கு பிரபாகரன் தொடுத்த விடுலைப் போர் சாட்சியாக அமைகிறது பிரபாகரன் நேத்தாஜி சுபாஸ் சந்திரபோசை நேசித்தார். அவரைப் போலவே பிரபாகரன் தூய்மையாக வாழ்ந்தார் நேத்தாஜியின் போராட்டப் பங்களிப்பு இன்னும் சரிவர கணிப்பி;டப் படவில்லை. மழங்ககடிக்கப் படுகிறது என்று கூடச் சொல்லலாம்.

தமிழினத்தை கடந்த முப்பதிற்கும் மேலான வருட காலம் வழிநடத்தி வரும் பிரபாகரன் அவர்களின் தாக்கம் உலகத் தமிழினத்தால் மிக நன்றாக உணரப்படுகிறது. உலக தமிழ்ச் சமுதாயத்தில் எது நடந்தாலும் அவருடைய தாக்கம் இல்லாமல் நடக்க முடியாதளவிற்கு அவர் முத்திரை பதித்துள்ளார்.

பொன்மொழிகள்

சிந்தனை துளிகள்


புகழ்ச்சியையும், அவமதிப்பையும் கருதாது என்றும் உண்மையை மேற்கொண்டு செய்யும் தியாகமே, சிறந்த தியாகம்.

*
தன்னை அடக்கப் பழகிக் கொண்டவன் வேறு எதற்கும் வசப்படமாட்டான். அவனே வாழத் தகுதியுள்ளவன்.

*
நம்மை நாமே வெறுக்காமல் இருப்பது முதற்கடமை. முன்னேற்றமடைவதற்கு முதலில் சுயநம்பிக்கை அவசியம்.

* உலக நன்மைக்காக அவசியமாயின் உங்களிடமுள்ள அனைத்தையும் தியாகம் செய்யுங்கள், தூய்மை உடையவன் தான், நல்ல சிந்தனையாளனாக, பகுத்தரவாளனாக, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக ஆகிறான்.

* உங்களை ஓர் ஏழை என்று எப்போதும் நினைக்காதீர்கள், பணம் சக்தியல்ல, பணம் ஒன்றே வாழ்வின் இலட்சியம் என்றால் அது தவறான வழியிலேதான் தேடப்படும்.
பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒழுக்கத்தை விற்று விடாதே.

பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம். அது இல்லாத வனுக்குக் கவலை சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தை..
பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொள்

நியாயத்திற்கு நன்மை உறுதி

* வேலை செய்யாமல் பிறரிடம் பணம் பெறுவது பிச்சை எடுப்பதற்கு சமம். எவ்விதமான வேலையும் இல்லாமல் இருப்பவனைப் பார்ப்பது கூட, நமக்குத் தீமையை உண்டாக்கும்.

* பழிக்குப்பழி வாங்கியாக வேண்டும் என்ற எண்ணத்துடன் தண்டனை தரும் அதிகாரம் மனிதர் யாருக்கும் கிடையாது.

* பிறர் குற்றங்களை மன்னிக்கும் உயர்ந்த குணம், குற்றமற்ற நல்லவர்களிடம் மட்டுமே இருக்கும்.

* நியாயத்தராசை வைத்திருப்பவனின் கையில் ஆள்பலம், சொல்வலிமை, பணம் போன்ற எல்லா நன்மைகளும் வந்து சேரும்.

* பிச்சை எடுப்பவனிடம் மான உணர்வு இருக்காது. உள்ள உறுதி மிக்கவன் யாரிடமும் இலவசமாக எதையும் பெற விரும்புவதில்லை.

* வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு. முதலில் தன்னம்பிக்கை வேண்டும். அடுத்தபடியாய் உங்களுக்கு
இறை நம்பிக்கை கூட அவசியம் இல்லை..
உங்கள் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.

விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி

* உடலை வெற்றி கொள்ள முயலுங்கள். அது எப்போதும் நீங்கள் இட்ட கட்டளைக்குப் பணியும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

* அகங்காரத்தைக் களைந்தால் நல்ல சிந்தனையும் பகுத்தறிவும் , ஞானமும் ஏற்படும். அகங்காரத்தைக் களைந்ததால் தான் புத்தருக்கு ஞானம் பிறந்தது,