வெள்ளி, 27 ஏப்ரல், 2012











வறுமை காரணமாக , வில்வித்தை வீராங்கனை நிஷா ராணி தத்தா, உலகத்தரம் வாய்ந்த தனது "வில்லை' விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது துரதிருஷ்டவசமானது என, விளையாட்டு அமைச்சர் அஜய் மேகன் தெரிவித்தார்.
ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தின், பத்மடா கிராமத்தை சேர்ந்தவர் நிஷா ராணி தத்தா, 21. டாடா வில்வித்தை அகாடமியில் பயிற்சி பெற்ற இவர், பாங்காங்க் கிராண்ட் பிரிக்சில் நடந்த சர்வதேச வில்வித்தை போட்டியில், இந்தியா சார்பில் தங்கம் வென்றுள்ளார். வறுமை காரணமாக போதிய பண வசதி இல்லாததால், வில்வித்தையில் இருந்து ஒதுங்கி, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்.
இதனிடையே, நிஷா ராணியின் வீட்டினை பழுது பார்க்க பணம் தேவைப்பட்டது. இதற்காக, வில்வித்தை போட்டிக்கு பயன்படுத்தப்படும், உலகத்தரம் வாய்ந்த ரூ. 4 லட்சம் மதிப்புள்ள, தனது வில் மற்றும் அம்புகளை இவர் விற்ற செய்தி இப்போது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மத்திய விளையாட்டு அமைச்சர் அஜய் மேகன் கூறியது:
வறுமையால் இப்படி நடந்ததுள்ளது என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்திய விளையாட்டு ஆணையம் (எஸ்.ஏ.ஐ.,) மூலமாகத்தான் இந்த செய்தி தெரியவந்தது. அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத்தயராக உள்ளோம். மாநில அரசுகள் இவ்விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.
வீரர், வீராங்கனைக்குத் தேவையான நிதி ஆதாரங்களுக்கு போதிய வேலை வாய்ப்புகள் தரவேண்டும். ஏதோ ஒரு காரணத்துக்காக தேசிய அல்லது சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை என்றாலும், வாழ்க்கை நடத்த உத்தரவாதம் கொடுக்க வேண்டும். இவர்களை புறக்கணிக்கக் கூடாது.
இவ்வாறு அஜய் மேகன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக