திங்கள், 23 ஏப்ரல், 2012

மனித கழிவு கேஸ் : நாற்றம் இல்லை, எரிதிறன் அதிகம் : அசத்துகிறார் ஓய்வு பெற்ற பொறியாளர்


மனித கழிவில் இருந்து கேஸ் உற்பத்தி செய்து அதை பயன்படுத்தி சமையல் செய்து அசத்துகிறது ஓய்வு பெற்ற பொறியாளர் குடும்பம். நாற்றம் இல்லை, எரிதிறன் அதிகம் என்பது இதன் சிறப்பு.
கோவை கே.வடமதுரை திரு.வி.க நகரை சேர்ந்தவர் செல்வன் (62). ஓய்வு பெற்ற மின்வாரிய பொறியாளர். இவர் எரிசக்தி நிறுவனம், ஆராய்ச்சி பிரிவுகளில் பணியாற்றியுள்ளார். இவர் மனைவி கிரிஜேஸ்வரி. செல்வன் பணி ஓய்வு பெற்றபின் கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தை அணுகி, மனித கழிவிலிருந்து பயோ கேஸ் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த உதவி கேட்டார். கேலி கிண்டலுக்கு பிறகு அதிகாரிகள் ஒப்புதல் வழங்கினர்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மனோகரசிங் தலைமையில் அதிகாரிகள் குழு, முட்டை வடிவில் கழிவு சேகரிப்பு தொட்டி கட்டி அதில் டியூப் அமைத்து நேரிடையாக கேஸ் அடுப்புடன் இணைத்தனர். கடந்த ஜனவரி மாதம், மனித கழிவு கேஸ் அடுப்பு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதற்கு 40 ஆயிரம் ரூபாய் செலவானது. நாற்றம் எதுவும் இல்லாமல் கேஸ் அடுப்பு எரிகிறது. இதையடுத்து, மாநில அளவில், வீட்டு கழிவறையில் இருந்து கேஸ் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ஓய்வு பெற்ற மேற்பார்வை பொறியாளர் செல்வன் கூறியதாவது;

வழக்கமாக அமைக்கப்படும் 10 அடி நீளம், 5 அடி அகலம், 5 அடி ஆழத்தில் செப்டிங் டேங்க் கட்டி அதில் "கேஸ்தேங்கும் வகையில் கூம்பு போன்ற பகுதியை உருவாக்க வேண்டும். மனித கழிவில் இருந்து உருவாகும் கேஸ், கூம்பு பகுதியை சென்றடையும். அங்கே டியூப் அமைத்து அதை நேரிடையாக கேஸ் அடுப்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தேவையானபோது வால்வை திறந்து கேஸ் பயன்படுத்தலாம். செப்டிக் டேங்க்கில் மனித கழிவுடன் பழைய சோறு, குழம்பு, அழுகிய காய், பழம் உள்ளிட்ட மக்கும் பொருட்களை போடலாம். இதில் இருந்தும் உருவாகும் கேஸ் திடக்கழிவு செப்டிக் டேங்கின் ஒரு பகுதியில் வெளியேறி விடும். அதில் எவ்வித நாற்றமும் இருக்காது. ஏனெனில் கேஸ் வெளியேறிய பின்னர் நாற்றம் வராது. இதை பூந்தோட்டத்திற்கு உரமாக பயன்படுத்தி வருகிறோம். கழிவு தண்ணீரை செடிகளுக்கு பாய்ச்சுகிறோம். செப்டிக் டேங்க் அமைக்க 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகி விடும். இதையே கேஸ் தயாரிப்பு தொட்டியாக மாற்றினால் இரட்டிப்பு பயன் கிடைக்கும். 2 பேர் பயன்படுத்தும் கழிவறை மூலமாக 90 நிமிட நேரம் எரியும் அளவுக்கு கேஸ் கிடைக்கும்.

கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் பயோ கேஸ் பிரிவு தொழில்நுட்ப அலுவலர் ராஜா கூறியதாவது: மனித கழிவில் இருந்து தயாரிக்கப்படும் வாயுவை பயன்படுத்தி சமைக்கப்படும் உணவை சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், மக்கள் அருவருப்பாக கருதி இதை செய்ய முன்வருவதில்லை. கிராமங்களில் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தமிழகத்தில் முதல் முறையாக கோவையில் செல்வன் வீட்டில் மனித கழிவிலிருந்து பயோ கேஸ் தயாரிக்கப்படுகிறது. இதற்கு அரசு மானியமாக 8 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. மனித கழிவுகளில் "மீத்தேன்" வாயு அதிகம் என்பதால் வேகமாக எரியக்கூடியது. பெட்ரோலியம் கேசை காட்டிலும் இதன் எரிதிறன் 25 சதவீதம் அதிகம். விபத்து ஏற்படுத்தாது. இவ்வாறு ராஜா கூறினார்.

சமுதாய சமையல் கூடம்

ஆனைமலை அருகே தென் சங்கம்பாளையம் கிராமத்தில் 80 சதவீத மக்களுக்கு கேஸ் சிலிண்டர் வசதி கிடையாது. இங்கே 7 லட்ச ரூபாய் செலவில் சமுதாய சமையல் கூடம் அமைக்க, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டமிட்டுள்ளது. பொது கழிப்பிடத்தில் இருந்து "மீத்தேன்" வாயுவை எடுத்து அதில் இருந்து 12 கேஸ் அடுப்புகளை இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு வாரத்தில் இதற்கான பணிகள் துவக்கப்படும். இந்த சமையல் கூடத்தில் பொதுமக்கள் அரிசி, மளிகை பொருட்களை கொண்டு வந்து இலவசமாக சமையல் செய்து கொள்ளலாம். மாநிலத்தில் முதல் முறையாக இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.


1 கருத்து: